16 பந்தில் 74 ரன் விளாசிய ஆப்கன் வீரர் - என்னா அடி..!

துபாயில் நடைபெற்ற டி10 லீக் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாஜத் அதிரடியாக விளையாடி 16 பந்தில் 74 ரன் குவித்து அசத்தியுள்ளார்.


ராஜ்புட் - சிந்திஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு அணிகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். முதலில் விளையாடிய சிந்திஸ் அணி 10 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் 42 ரன் எடுத்தார். ராஜ்புட் அணியில் முனாஃப் பட்டேல் 2 ஓவர் வீடி 20 ரன் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.


இதனையடுத்து 95 ரன் என்ற இலக்குடன் விளையாடிய ராஜ்புட் அணியில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம், முகமது ஷாஜத் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிந்திஸ் வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கினர். முதல் ஓவரிலேயே 20 ரன் அடிக்கப்பட்டது. மெக்கல்லம் இரண்டு சிக்ஸர் அடிக்க 2வது ஓவரில் 23 ரன் எடுக்கப்பட்டது.


மெக்கல்லம் அதிரடியாக விளையாடினாலும், அவருக்கு வாய்ப்பே கொடுக்காமல், சந்திக்கும் பந்தையெல்லாம் சிக்ஸரும், பவுண்டரியுமாக மாற்றினார் அகமது. வெறும் 12 பந்துகளிலேயே அகமது அரைசதம் விளாசி சாதனை படைத்தார். இதற்கு முன்பாக யுவராஜ் சிங், கெயில் இருவரும் 12 பந்தில் அரைசதம் அடித்துள்ளனர். மூன்றாவது வீரராக அகமது இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


இறுதியில் வெறும் 4 ஓவரில் 96 ரன்கள் அடித்து வெற்றியை பதிவு செய்தனர். மெக்கல்லம் 8 பந்துகளில் 21 ரன் விளாச, முகமது 16 பந்தில் 74 ரன் குவித்து இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8 சிக்ஸர்கள், 6 பவுண்டர்கள் விளாசினார் முகமது. 36 பந்து மீதமுள்ள நிலையில் ராஜ்புட் அணி வெற்றி பெற்றது. இந்த இன்னிங்சில் ஒரே ஒரு பந்து மட்டுமே ரன் எடுக்காமல் விடப்பட்டது.


ஆட்டநாயகன் விருது பெற்ற முகமது பேசுகையில், “என்னுடைய உடல் தகுதியை முறையாக வைத்துக் கொள்ள நிறைய பயிற்சிகளை மேற்கொள்கிறேன். ஆனால், சாப்பாடு விஷயத்தில் கட்டுப்பாடுகள் கிடையாது. விராட் கோலியை போல் தொடர்ச்சியாக உடலை பிட்னஸாக வைத்துக் கொள்ள வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், அது எனக்கு சாத்தியமில்லை. இருப்பினும் நான் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். விராட் கோலியை விட மெகா சிக்ஸர்களை என்னால் அடிக்க முடியும். அப்படியிருக்க நான் ஏன் அவரைப் போல் டயட்டை பின்பற்ற வேண்டும்” என்றார்.

Powered by Blogger.