2வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு - இந்தியாவுக்கு 137 ரன் இலக்கு
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. அங்கு 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில், முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் போட்டியை போலவே இன்றைய போட்டியிலும் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முந்தைய போட்டியை போலவே பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடக்கம் முதலே திணறினர். விக்கெட்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்தனர். 10 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் மழை குறுக்கிட்டது.
இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஆஸ்திரேலியா அணி கடைசி ஒரு ஓவரை பேட்டிங் செய்யமுடியவில்லை. இதனையடுத்து இந்திய அணிக்கு 19 ஓவரில் 137 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார், அஹமது தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் வாரி வழங்கினர். குல்தீப் 4 ஓவரில் 23 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
முன்னதாக கடந்த டி20 போட்டியிலும், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி நிறுத்தப்பட்டு இந்தியாவிற்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. மழை குறுக்கிட்டது முந்தைய போட்டியில் ஒருவகையில் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.