“தேர்தல் இன்று நடந்தாலும் பாஜக 30 எம்.பி தொகுதிகளை வெல்லும்” - பொன்.ராதாகிருஷ்ணன்நம்பிக்கை


மக்களவை தேர்தல் இன்று நடைபெற்றாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி நிச்சயம் 30 தொகுதிகளை வெல்லும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள விரிவான பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியின் சில பகுதிகள்:-

1. தமிழகத்தில் பாஜகவின் வலிமை குறித்து உங்களது மதிப்பீடு?

பாஜக, கூட்டணியில் வலிமையான சக்தியாக உருவெடுத்து தமிழகத்தில் பெருவாரியான இடங்களை பிடிக்கும். மக்களவை தேர்தல் இன்று நடந்தாலும் எங்களது கூட்டணி குறைந்தபட்சம் 30 தொகுதிகளை கைப்பற்றும். இருப்பினும், எங்கள் இலக்கு 40 தொகுதிகள்.

2. கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கி விட்டீர்களா?

அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை. ஆனால், நட்பு ரீதியாக பேச்சு நடத்தி வருகிறோம். 2014 மக்களவை தேர்தலில் அமைத்ததை விட வலிமையான கூட்டணியை அமைப்போம்.

3. அதிமுக, அமமுக இரண்டு இணைய வேண்டுமென பாஜக உண்மையில் விரும்புகிறதா?

இது அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகளின் விருப்பம். இது அவர்களுக்குள் நடக்கும் பிரச்னை. நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

4. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா?

தேர்தல் கூட்டணிகள் அமைக்க இன்னும் காலங்கள் உள்ளது. இருப்பினும், எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில், தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத கட்சிகள் உண்டா? தேர்தல் கூட்டணி என்பது இரண்டு கட்சிகளிடையே பொதுவான சில நலன்களை வைத்து உருவாக்கப்படுவது. அதனால், யார் கூட்டணியில் இடம்பெறுவார்கள், யார் இடம்பெற மாட்டார்கள் என்பதை சொல்ல முடியாது.

5. அதிமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால், அக்கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக யோசிக்குமா?

திமுக, அதிமுக தொடக்கப்பட்ட நாள் முதல், ஏதோ ஒரு கூட்டணியில் அக்கட்சிகள் தேர்தல்களை சந்தித்து வருகின்றன. தற்போது, தேர்தல் நேர கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதனால் சொல்கிறேன், கூட்டணி குறித்து கருத்து சொல்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

6. திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக பார்க்கிறது என தம்பிதுரை கூறியுள்ளாரே?

அதற்கான எந்த சாரமும் இல்லை. ஆதரவில்லாத குழந்தையில் குரல் போல் அவரது கருத்து உள்ளது.

7. 20 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பாஜக போட்டியிடுமா?

ஆம். நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் நிச்சயம் போட்டியிடுவோம்.

8. தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திப்பதற்கான பாஜகவின் வியூகம் என்ன?

பூத் அளவிலான நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தற்போது தொடங்கியுள்ளோம். எந்த நேரம் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம்.
Blogger இயக்குவது.