‘பிப். 7க்குள் திருவாரூரில் இடைத்தேர்தல்’ - தேர்தல் ஆணையம்


திருவாரூரில் பிப்ரவரி 7ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். அவர் மறைவைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த திருவாரூர் தொகுதி காலியானது. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே. போஸ் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவர் மறைவை தொடர்ந்து அவர் பதவி வகித்த திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியானது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது இடைத்தேர்தல்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பருவமழையை சுட்டிக் காட்டி தமிழக அரசு கடிதம் எழுதியதை அடுத்து, தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிக்கவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேர்தல் நடத்தப்படும் என்று மட்டும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடத்தக் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று நடைபெற்றது. அப்போது, திருவாரூரில் பிப்ரவரி 7ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்திருந்த மனுவில், ‘வழக்கு நிலுவையில் உள்ளதால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பற்றி இப்போது முடிவெடுக்க இயலாது’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் பதிலை ஏற்று மனுதாரர் கே.கே.ரமேஷின் வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.
Blogger இயக்குவது.