“ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் சோகம் புரியாது” - கமல்ஹாசன்
தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால் புரியும் சோகம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி நேற்று முன் தினம் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து புயல் பாதிப்பு நிவாரண நிதியை பிரதமரிடம் கோருவதற்காக முதலமைச்சர் நேற்று டெல்லி சென்றார். இதையடுத்து இன்று காலை டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதலமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ கஜா புயல் பாதிப்பு குறித்த விவரங்களை கணக்கிட்டு அதுதொடர்பான அறிக்கையை பிரதமரிடம் அளித்துள்ளேன். கஜா புயல் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 1,500 கோடி பிரதமரிடம் கோரப்பட்டுள்ளது. மொத்த சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூபாய் 15,000 கோடியை ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரியுள்ளேன்.
சாலை மார்க்கமாக சென்ற ஸ்டாலினால் எத்தனை இடங்களை ஆய்வு செய்ய முடிந்தது..? ஹெலிகாப்டர் மூலமாக சென்றதால் தான் டெல்டா மாவட்டங்களில் சேத விவரங்களை முழுமையாக தன்னால் தெரிந்து கொள்ள முடிந்தது” என தெரிவித்தார்.
இந்நிலையில், தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால் புரியும் சோகம். தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இன்னொரு ட்வீட்டில்,“அம்மையப்பன்,அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள், கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம், எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்.” என தெரிவித்துள்ளார்.