நிவாரண நிதிக்கா..? தனிப்பட்ட அரசியலுக்கா..? முதல்வர் டெல்லி பயணம் குறித்துதினகரன் கேள்வி


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கஜா பபுயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும், நிதியுதவியும் வழங்கினார். தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களை ஆய்வு செய்ய முடியாமல் ஆய்வுப் பணிகளை பாதியிலேயே நிறுத்தினார். இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதி கோரி பிரதமர் மோடியை நாளை காலை சந்தித்து பேசுகிறார். இதற்காக இன்று மாலை விமானம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா? அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக? என வினவியுள்ளார்.

கஜா புயலால் சேதமடைந்த நூற்றுக்கணக்கான கிராமங்களை, அதிகாரிகள் பார்வையிட்டு இழப்புகளை மதிப்பீடு செய்யாத நிலையில், எதன் அடிப்படையில் முதலமைச்சர் நிவாரணம் கோர இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மிகப்பெரிய இயற்கை பேரிடர் நிகழ்ந்துள்ள நிலையில், மத்திய அரசிடம் இருந்து இடைக்கால நிவாரணம் கோராதது ஏன் என்றும் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Blogger இயக்குவது.