நீக்கப்பட்ட சர்ச்சை: மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் கிரிக்கெட் வாரியத்திடம் விளக்கம்!
மிதாலிராஜ் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவரும் ஹர்மன்பிரீத் கவுரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நேற்று விளக்கம் அளித்தனர்.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடந்தது. இதில், பி பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.
இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை இந்திய அணி வென்றது. இந்தப் போட்டி யில் மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியது. அதற்கு முன், 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருந் தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி, ஆன்டிகுவாவில் நடந்தது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில், இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. இதில், மிதாலிராஜ் சேர்க்கப்படாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இது பற்றி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்டபோது, ‘ எந்த முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப் பட்டது. இதில் வருத்தப்பட எதுவும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மிதாலி ராஜின் மானேஜர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விளாசினார். ‘கவுர், சூழ்ச்சியாக செயல் படுகிறார். அவர் பொய் சொல்கிறார். முதிர்ச்சியற்றவர், கேப்டனாக இருக்க தகுதியில்லாதவர்’ என்று ட்விட்டரில் கடுமையாகத் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பிய சிறிது நேரத்திலேயே அந்த ட்விட்டை நீக்கிவிட்டார் குப்தா.
இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளிக்க மிதாலிராஜ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பயிற்சியாளர் ரமேஷ் பவார், மானேஜர் திருப்தி பட்டாச் சார்யா ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்ப உள்ளதாக கூறப்பட்டது. தனித்தனியாக விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் இருந்து திரும்பியதுமே, மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வந்தனர். இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளனர்.
இதை உறுதி செய்த ராகுல் ஜோரி, ‘மிதாலி, ஹர்மன்பிரீத், திருப்தி பட்டாச்சார்யா ஆகியோர் எங்களிடம் தனித்தனியாக விளக்கம் அளித்தனர். அவர்கள் என்ன விளக்கம் அளித்தார்கள் என்பதை வெளியில் சொல்ல இயலாது’ என்றார்.
இதையடுத்து அவர்களின் விளக்கங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் கமிட்டியிடம் சபா கரீமும் ராகுல் ஜோரி யும் வழங்க இருக்கின்றனர்.