ஸ்டெர்லைட் விவகாரம் - முதலமைச்சரே காரணம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு


ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அரசின் சீராய்வு மனு தள்ளுபடிக்கு முதல்வரே பொறுப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அரசின் சீராய்வு மனு தள்ளுபடிக்கு முதல்வரே பொறுப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு அரசாணையை வெளியிட்டு ஆலையை மூடிவிட்டு அதையே நியாயப்படுத்தியது அதிமுக அரசு எனவும் மக்களின் சுகாதார பாதுகாப்பிற்கு முக்கியமான ஒரு வழக்கை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இந்த வழக்கு உதாரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Blogger இயக்குவது.