கிரிக்கெட் வீரர்கள் அரசியல் கருத்துகளை தவிர்க்க வேண்டும்: மியான்தத்

கிரிக்கெட் வீரர்கள் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் தெரிவித்துள்ளார்.


காஷ்மீர் விவகாரம் குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி, கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். காஷ்மீரை, ’இந்தியா, பாகிஸ்தான் உள்பட எந்த நாடும் சொந்தம் கொண்டாடக்கூடாது. அதை தனி நாடாக அறிவிக்க வேண்டும். நாட்டில் உள்ள 4 மாகாணங்களை நிர்வகிக்கவே, பாகிஸ்தான் திணறும்போது அதற்கு காஷ்மீர் தேவையில்லை’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.


இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கருத்தை இந்திய மீடியா திரித்து வெளியிட்டுள்ளதாக அவர் மறுப்பு தெரிவித்தார்.


இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் தொடர்பான கருத்துகளை தெரிவிக்காமல் இருப்பது நல்லது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'காஷ்மீர் தொடர்பாக ஷாகித் அப்ரிதி சொன்ன கருத்து பொருத்தமானது அல்ல. இதைத் தவிர்த்திருக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் அரசியல் மற்றும் உணர்ச்சியைத் தூண்ட கூடிய விவகாரங்களில் கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது’ என்று தெரிவித்துள்ளார்

Powered by Blogger.