“இனி ஊடகங்களை சந்திக்கவே மாட்டேன்” - கர்நாடக முதல்வர் சாடல்
தன்னுடைய எல்லா பிரச்னைக்கும் ஊடகங்கள்தான் காரணம் என்றும், இனி ஊடகங்களை சந்தித்து பேச மாட்டேன் என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரியும், நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் கரும்பு விவசாயிகள் கடந்த சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் கர்நாடக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. இருப்பினும், பிரச்னை முடிவுக்கு வந்த பாடில்லை. இதனிடையே விவசாய சங்க தலைவர் ஜெயஸ்ரீ குரன்னவர் பற்றி குமாரசாமி பேசியதாக வீடியோ ஒன்றும் வைரலானது.
இந்நிலையில், விவசாய சங்க தலைவர் ஜெயஸ்ரீ குரன்னவர் பற்றிய தன்னுடைய கருத்து ஊடகங்களில் திரித்து கூறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஊடகங்களுக்கு இனி பேட்டி கொடுக்கப்போவதில்லை என அவர் கோபமாக பேசினார்.
“ ஊடகங்களின் செயல்பாடுகளால் நான் வருத்தமடைந்துள்ளேன். தன்னை பற்றிய நியாயமற்ற முறையில் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. சில குறிப்பிட்ட ஊடகங்கள் எனக்கு எதிராக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சிறிய விஷயத்தை கூட எனக்கு எதிராக பூதாகரமாக்கிவிடுகிறார்கள். அது எனக்கு பெரிய வலியை ஏற்படுத்தியுள்ளது.
இனிமேல் வரும் காலங்களில் ஊடகங்களை சந்திப்பது இல்லை என முடிவு செய்துள்ளேன். உங்களுக்கு வேண்டுமென்றால் செய்திகளை போடுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். எனக்கு அதனை பற்றி கவலையில்லை” என்று குமாரசாமி கூறினார்.
இதனையடுத்து, முதல்வர் குமாரசாமியின் இந்தப் பேச்சை கர்நாடக பாஜக தலைமை கடுமையாக விமர்சித்துள்ளது. ஊடகங்களை கையால்வதில் முதல்வர் தோல்வி அடைந்துவிட்டதாகவும், இது பேரிடர் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.