சூழ்ச்சியுடன் செயல்படுகிறார்’: மகளிர் கிரிக்கெட் கேப்டன் மீது மிதாலி ராஜ் மானேஜர் பாய்ச்சல்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சூழ்ச்சியுடன் செயல்படுகிறார் என்று மூத்த வீராங்கனை மிதாலிராஜின் மானேஜர் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.


மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.


இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் 56 ரன் கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை இந்திய அணி வென்றது. இந்தப் போட்டி யில் மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியது. அதற்கு முன் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருந்தது.


இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி, ஆன்டிகுவாவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி, 19.3 ஓவரில் 112 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில், அதிகப் பட்சமாக மந்தனா 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் எமி ஜோன்ஸ் 53 ரன்களும் நடாலி சிவர் 52 ரன்களும் எடுத்தனர். இந்த தோல்வியை அடுத்து இந்திய மகளிர் அணி, உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளி யேறியது.


முக்கியமான இந்தப் போட்டியில், இந்த தொடரில் இரண்டு அரை சதம் விளாசிய மிதாலிராஜ் சேர்க்கப்படவில்லை. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. காயம் காரணமாக அவர் கடைசி லீக்கில் ஆடவில்லை என்றாலும் காயத்தில் இருந்து குணம் அடைந்த பின்னும் அவர் சேர்க்கப் படாதது ஏன் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் நாசர் ஹூசைனும் சஞ்சய் மஞ்சரேக்கரும் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்டனர்.


அவர் கூறும்போது, ’ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். அந்த கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜ்-க்கு இடம் கிடைக்கவில்லை. எந்த முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப் பட்டது. இதில் வருத்தப்பட எதுவும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.


இதையடுத்து மிதாலி ராஜின் மானேஜர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விளாசியுள்ளார். ‘கவுர், சூழ்ச்சியாக செயல் படுகி றார். அவர் பொய் சொல்கிறார். முதிர்ச்சியற்றவர், கேப்டனாக இருக்க தகுதியற்றவர்’ என்று ட்விட்டரில் கடுமையாகத் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை கிளப்பிய சிறிது நேரத்திலேயே அந்த ட்விட்டை நீக்கிவிட்டார் குப்தா.


இதுபற்றி கிரிக்இன்போ கிரிக்கெட் இணையதளம் அவரிடம் விசாரித்தபோது, தனது கருத்து உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். இதைய டுத்து மகளிர் கிரிக்கெட் அணிக்குள்ளும் அரசியல் புகுந்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

Powered by Blogger.