ரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்
பாஜக மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை எனவும் ரஜினிகாந்த் தெளிவான பதிலை தெரிவித்துள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவுக்கு எதிரான பல்வேறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைக்கின்றன. பாஜக அவ்வளவு ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு அப்படின்னு அவர்கள் நினைச்சிட்டு இருக்காங்க. அப்ப அதுதானே கண்டிப்பா உண்மையாக இருக்க முடியும் என ரஜினி பதில் அளித்திருந்தார்.
அதைதொடர்ந்து ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எதிர்க்கட்சிகளுக்கே பாஜக ஆபத்தான கட்சி என்று நான் பதில் சொன்னேன் எனவும் பாஜக ஆபத்தான கட்சியா என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பது குறித்து கேட்டதற்கு 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்று நீங்கள் சொல்லுங்கள்? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பாஜக மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை எனவும் ரஜினிகாந்த் தெளிவான பதிலை தெரிவித்துள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக நேர்மறையான அரசியலை நடத்தி வருவதாகவும் தமிழகத்தில் பலம் வாய்ந்தவர்கள் பாஜக கூட்டணியில் இணைவார்கள் எனவும் குறிப்பிட்டார்.