மதிமுக போராட்டத்திற்கு திமுக ஆதரவு - வைகோ கேள்விக்கு ஸ்டாலின் சூசக பதில்


திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தங்கள் கூட்டணியில் மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியது பற்றிய கேள்விக்கு வைகோ இதனை தெரிவித்தார்.

இதனிடையே, ராஜீவ் காந்‌தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் மதிமுகவின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஏழு பேரையும் விடுதலை செய்யாமல் மனித நேயமின்றி காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 3ஆம் தேதி மதிமுக நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதனிடையே, தோழமைகளாக இயங்கிவரும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக ஆகியவை கூட்டணியாக மாற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.