“சிபிஐக்கு இனி அனுமதி கிடையாது” - சந்திரபாபுவை அடுத்து மம்தா அதிரடி

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து, மேற்குவங்க மாநிலத்தில் இனி சிபிஐ விசாரணைக்கு அனுமதி மறுக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.


ஆந்திர பிரதேசத்தில் அனுமதியின்றி சிபிஐ எந்த ஒரு சோதனையும், விசாரணையும் மேற்கொள்ளக்கூடாது என சமீபத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருந்தார். ஆந்திராவில் சிபிஐ சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. சிபிஐ பணிகளை மேற்கொள்ள மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு ஆந்திர அரசு அதிகாரம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்க சிபிஐ அமைப்பினை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டி இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.


ஆந்திராவில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்த சந்திரபாபுவின் முடிவை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். மேலும், மேற்குவங்கத்தில் அதுபோன்ற நடவடிக்கையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இனிமேல், சிபிஐ அதிகாரிகள் மாநில அரசின் அனுமதியில்லாமல் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.


சட்டப்படி, டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் மட்டுமே விசாரணை நடத்த சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும்.

Blogger இயக்குவது.