சாதாரணமாக நியூஸ் சேனல் ஆரம்பிக்கிறார்கள்? - விஷால்
சாதாரண மாத சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களால் சாதாரணமாக நியூஸ் சேனல் ஆரம்பிக்க எப்படி முடிந்தது என
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி தீபாவளி அன்று வெளியான திரைப்படம் ‘சர்கார்’. சன்பிக்சர்ஸ்
கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில்
மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.
மேலும் இப்படத்தில் ஆளும்கட்சியான அதிமுகவையும் அதன் இலவசத் திட்டங்களையும் விமர்சித்ததாக சர்ச்சைகள் எழுந்து பெரும்
போராட்டமே நடைபெற்றது. ஜெயலலிதாவின் இயற்பெயரைப் பயன்படுத்தியதாக கூறி அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும்
கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து சர்கார் படம் மீண்டும் தணிக்கை செய்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு வெளியானது. இதையடுத்து
செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி, தான் மதிக்கும் கட்சியை இழிவு படுத்தினால் தன்மானம் உள்ள கட்சிக்காரர்கள்
கொதிக்கத்தான் செய்வார்கள் என தெரிவித்தார்.
மேலும், பல நூறு கோடிக்கு இவர்கள் படம் எடுக்கிறார்கள். இதற்கு பணம் எங்கிருந்து வருகிறது?, ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று,
ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சிகிறார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று அதிமுக சார்பில் 24 மணிநேர புது செய்தி சேனல் ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
”புதிதாக ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்கப்படுவதாக கேள்விப்பட்டேன். எனக்கு தெரிந்து ஒரு சேனல் ஆரம்பிக்க வேண்டுமென்றால் அதிக
பணம் செலவிட்டு, நிறைய விதிமுறைகளை கடந்து வருவது மிகவும் கஷ்டம். ஆனால் மாத சம்பளம் வாங்கும் எம்.பி,
எம்.எல்.ஏக்களால் எப்படி சாதாரணமாக செய்தி சேனல் ஆரம்பிக்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை.” என தெரிவித்துள்ளார்.