இன்று சச்சின் ஓய்வு பெற்ற தினம் - நினைவுகளை பகிரும் ரசிகர்கள்
கிரிக்கெட் உலகின் மாபெரும் ஆளுமை எனக் அழைக்கபடும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற தினம் இன்றாகும்.
கிரிக்கெட் உலகில் இதுவரை யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்துள்ளவர் சச்சின். இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வி அடைந்தாலும் டெண்டுல்கர் ஆட்டத்தை பார்ப்பதற்கே ஒரு தனி ரசிகர் கூட்டம் அந்தக் காலத்தில் இருந்தது.
1989ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கை
யை தொடங்கிய சச்சின் டெண்டுல்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி ஓய்வு பெற்றார். 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் ஒரு டி20 போட்டி மற்றும் 78 ஐபிஎல் போட்டிகளில் சச்சின் விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களை இவர் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக பட்ச ரன்களாக 200 ரன்களை எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி ஒருநாள் போட்டியில் 154 விக்கெட்டுகள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 46 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
இந்த நாள் வரையிலும் கிரிக்கெட் உலகின் சாதனை மன்னன் என்ற பட்டத்தை தக்க வைத்துள்ளவர் சச்சின். கிரிக்கெட் உலகில் தற்போது கூட ஒரு வீரர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தால், அவரை புகழும் விதமாக சச்சினை போன்று வருவார் என ஒப்பிட்டு கூறுவது வழக்கமாக உள்ளது. உதாரணத்திற்கு விராட் கோலியை சச்சின் டெண்டுல்கருடன் பலரும் ஒப்பிட்டு கூறி வருகின்றனர்.
ஆனால் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சச்சின் ரசிகர்கள் வாதம் செய்து வருகின்றனர். இன்று சச்சினின் ஓய்வு தினம் என்பதால் அவரது புகைப்படங்கள் மற்றும் சாதனைகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
எந்தக் காலத்தில், எத்தனை பேட்ஸ்மேன்கள் வந்தாலும் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக முடியாது என்பதே கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. ஏனென்றால் சச்சின் காலத்தில் இருந்த போன்ற பவுலர் ஜாம்பவான்கள் தற்போதைய காலத்தில் இல்லை.