“தினகரன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது” - டெல்லி நீதிமன்றம்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரனுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் குற்றப்பத்ரிக்கை தாக்கல் செய்தது. அதன்படி தினகரன் மீது மோசடி, சாட்சியங்களை கலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் செய்ததற்கான முகாந்தரம் உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.


வழக்கில் இருந்து தினகரனை விடுவிக்க முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம், தினகரன் மீதான புகாரை முழுமையாக விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், தினகரன் மட்டுமல்லாது சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு, வழக்கில் இருந்து நத்துசிங், லலித் குமார், குல்பித்குந்த்ரா உட்பட 5 பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் டிசம்பர் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுதொடர்பாக தினகரன் தனது ட்விட்டரில், “சிலரது சதியின் காரணமாக, இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்” என்ற கூறியுள்ளார்.

Blogger இயக்குவது.