21 ஆண்டுகளுக்கு பிறகு முன்னணி நடிகருடன் மீண்டும் நடிக்கும் வடிவேலு - பரபரக்கும் கோடம்பாக்கம்
தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாகவே நம்பர் 1 நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. கடந்த ஏழு வருடங்களாக இவர் தமிழ் சினிமாவால் ஓரங்கட்டப்பட்டார். ஆனாலும், இவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.
நன்றாக போய்கொண்டிருந்த தனது சினிமா வாழ்கையை கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு தனது இமேஜை தாறுமாறாக கெடுத்துக்கொண்டார்.
ஆனால், நடந்த அந்தத் தேர்தலில் அதிமுக அமோகமான வெற்றியை பெற்றது. அதன் பின் சினிமாவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார் நடிகர் வடிவேலு. இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எதுக்கு வம்பு என அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்க யோசித்தார்கள்.
இருப்பினும், 'தெனாலிராமன், எலி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். 'கத்தி சண்டை, சிவலிங்கா' ஆகிய படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார்.
இரண்டுமே எடுபடவில்லை. இருப்பினும் 2017ல் வெளிவந்த 'மெர்சல்' படத்தில் அவர் சிறிது நேரமே வந்தாலும் சிரிக்க வைத்தார். இதனிடையே, மீண்டும் வருவேன் என சில நாட்கள் முன் வடிவேலு அறிவித்தார்.
இப்போது அவர் கமல்ஹாசன் நடிக்க உள்ள 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கப் போவதாக செய்தி பரவி வருகிறது. ஆனாலும், அப்படத்தைத் தயாரிக்கும் லைக்காவிற்கும், வடிவேலுவுக்கும் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்தில் மோதல் இருக்கிறது.
அப்படியிருக்கையில் அவர் எப்படி அவர்கள் தயாரிக்கும் 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் நடிக்க சம்மதிப்பார்கள் என திரையுலகில் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஒருவேளை, கமல்ஹாசன் வடிவேலு தான் வேண்டும் என்று சொல்லி வற்புறுத்தினால் மட்டுமே அது நடக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
அப்படி நடந்தால் 21 வருடம் கழித்து கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெறுவார் வடிவேலு. கமலுடன் கடைசியாக 1998-ம் வெளியான காதலா காதலா திரைப்படத்தில் செக்யூரிட்டி சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். அதன் பிறகு என்ன காரணமோ, வடிவேலுவுடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவேயில்லை.