தடுமாறும் தர்பார் - ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியதா..? - என்ன ஆச்சு முருகதாஸிற்கு..?


ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்த நடிகர் ரஜினி, இயக்குனர் முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால், இது எந்த விதத்திலும் படத்தின் வசூலை பாதிக்காது என்று கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தினர்.

காரணம், படம் வெளியான முதல் நாளான இன்று மட்டும் உலகம் முழுதும் 80 கோடி வசூல் என்ற இலக்கை எட்டியுள்ளது தர்பார். படத்தில், ஆதித்யா அருணாச்சலமாக வரும் ரஜினிகாந்த் மும்பை மாநகரில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் பிரச்சனையை தீர்க்க அங்கு அனுப்பப்படுகிறார். 

போலீஸ் கமிஷனராக இருந்தாலும் சட்டப்படி மட்டுமே நடக்கும் ஆள் இல்லை இந்த ஆதித்யா. சட்டத்தை மீறுகிறீர்களே என்று கேட்கும் மனித உரிமை ஆணைய உறுப்பினர்களையே மிரட்டுகிறார் ஆதித்யா அருணாச்சலம். பெரிய தொழில் அதிபரின் மகனான போதைப் பொருள் சப்ளை செய்யும் அஜய் மல்ஹோத்ராவை என்பவரை கைது செய்கிறார்.

ஆனால், ஆள் மாறாட்டம் மூலம் அஜய் மல்ஹோத்ரா ஜெயிலில் இருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார். ஆனால், அதற்கு உதவிய சில அதிகாரிகளை வைத்தே அஜய் மல்ஹோத்ராவை முடித்து கட்டும் விதம் வேற லெவல்.

முருகதாஸின் முந்தைய படங்களான ரமணா, துப்பாக்கி போன்று இந்த படத்திலும் நீதி கிடைக்க ஹீரோ சட்டத்தை தன் கையில் எடுக்கிறார். பேட்ட படத்தை பார்த்த முருகதாஸ் தர்பாரில் ரஜினியை மிகவும் இளமையாக காட்டியுள்ளார். 

இந்த படத்தின் பலமே ரஜினி, நிவேதா தாமஸ் இடையேயான சென்டிமென்ட் காட்சிகள் தான். அதிலும் குறிப்பாக மருத்துவமனை காட்சியில் நிவேதா தாமஸின் நடிப்பு அருமை. என்ன தான் மேக்கப் போட்டாலும் ரஜினியின் நிஜ வயது சில இடங்களில் தெரிந்து விடுகிறது. 

நயன்தாரவுக்கு தர்பார் படத்தின் கதையில் உள்ள பங்கு என்ன..? அவர் எதற்கு ஹீரோயின் என்று இருக்கிறார் என்று முருகதாஸிடம் தான் கேட்க வேண்டும். 

பிரதான வில்லன், ஹரி சோப்ரா என்பவருக்கு ஹாய்.. ஊய் என பயங்கரமாக பில்ட்-அப் கொடுத்தாலும் சொத்தையான வில்லனாக தெரிகிறார். வில்லன் என்பதால் பலரை கொலை செய்கிறார். 

ஆனாலும் ரசிகர்களுக்கு அந்த வில்லன் மீது கோபம் வரவில்லை என்பது தான் நிதர்சனம். அவருக்கும், ரஜினிக்கும் இடையேயான மோதல் காட்சி பெரிய அழுத்தத்தை எதையும் ஏற்படுத்தவில்லை.

வில்லன் கதாபாத்திரம் சரியாக இல்லாத எந்த படமும் ரசிகர்களைஈர்க்காது என்பது எழுதப்படாத விதி. வில்லன் செய்யும் வில்லத்தனங்களை பார்த்தால் நமக்கு கோபம் கொப்பளிக்க வேண்டும்.அப்படியான வில்லன்கள் உள்ள படம் ஹிட் அடிக்கும்.


ஆனால், தர்பார் இந்த விஷயத்தில் தடுமாறி விட்டது என்பது தான் உண்மை. இருந்தாலும், ரஜினிகாந்த் என்ற 70 வயது இளைஞர் காட்டும் மாஸ் தான் ரசிகர்களை கவர்ந்த ஒரே விஷயம். சும்மா கிழி பாடல் எதோ நட்சத்திர விடுதியில் வைத்ததற்கு பதிலாக ரோட்டில் இறங்கி ஆடும் படியாக வடிவமைக்கப்பட்டிருந்தால் இன்னும் மாஸாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் ரஜினி படம் என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு திருப்தியை கொடுத்த இந்த படம், முருகதாஸ் படம் என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு  என்ன ஆச்சு முருகதாஸிற்கு என்ற கேள்வியுடன் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
Blogger இயக்குவது.