வீட்டில் உள்ள ஜிம்மில் வொர்கவுட் - சூர்யாவின் இடது கையில் பலத்த காயம் - பயப்படுவதற்கு ஒன்றுமில்லையாம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக இளவட்ட ரசிகர்களை அதிகம் கொண்ட நடிகர் சூர்யா. நடிகர் என்பதை தாண்டி இவர், தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம், வசதி இல்லாமல் படிக்க முடியாமல் கஷ்டப்படும் பல குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
வித்தியாசமான கதை களங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அயன் படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படி ஒரு ஹிட் படம் அமையவில்லை. இந்நிலையில், இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான NGK மற்றும் காப்பான் ஆகிய படங்கள் தோல்வியை தழுவியதால், அடுத்ததாக தான் நடிக்க உள்ள படத்தின் கதைகள் மீது அதிக கவனம் செலுத்தி தேர்வு செய்து நடித்துள்ளார்.
அந்த வகையில், இவர் இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வரும் சூர்யாவுக்கு சில நாட்களுக்கு முன்பு அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தானாகவே ஆறிவிடும் என்று வீட்டிலேயே இருந்துள்ளார் சூர்யா.
ஆனால், காயம் குணமாவது போல தெரியாததாள் மருத்துவமனைக்கு விரைந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார். காயத்தின் அளவு சிறிதுதான் என்பதால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் விரைவில் குணமடைந்து விடுவார் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.