ஹீரோவா..? டைரக்டரா..? - நடிகர் விஜய்யின் மகன் ஆசை என்னன்னு பாருங்க..!


சினிமா மட்டும் இல்லை. உலகத்தின் எல்லா தொழில்களிலும் அந்த தொழில் செய்பவர்களுடைய வாரிசுகள் அதே துறையில் பணியாற்றுவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அந்த வகையில், தமிழ் சினிமாவில் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாவதும் புதிதல்ல.

அவ்வளவு ஏன்.. ஊர், ஊராய் .. தெரு தெருவாய் நடந்து வளர்க்கபட்ட ஒரு கட்சி , பலரது ரத்தமும், சதையும் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சி.. ஆனால், உழைத்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியாமல் இன்று ஒரே ஒரு குடும்பத்தின் பிடியில் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைக்கு தாரை வார்க்கப்பட்டுக்கொண்டிருகின்றது ஒரு அரசியல் கட்சி.

ஆத்தாடி.. அது அரசியல்.. அது எதுக்கு நமக்கு. வாங்க நாம நம்ம விஷயத்தை பாப்போம்.. ஏற்கனவே கார்த்திக், பிரபு தொடங்கி தற்போது அவர்களின் மகன்கள் என மூன்றாவது தலைமுறையாக பலர் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். நடிப்பு பின்புலம் இல்லாமல் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்களும் கூட தங்களது வாரிசுகளை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், ஆதித்ய வர்மா படம் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகன் ஆகி விட்டார். அவரைத் தொடர்ந்து விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யும் நடிக்க வருவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல், கனடாவில் திரைத்துறை சம்பந்தப்பட்ட படிப்பு படித்து வரும் ஜேசன் குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனால், "மாஸ்டர்" படத் தயாரிப்பாளரும், விஜய்யின் உறவினருமான பிரிட்டோவின் புதிய படத்தில் சஞ்சய் ஹீரோவாகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு பட வேலைகள் ஆரம்பமாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்தச் செய்தி உண்மையில்லை என பிரிட்டோ தெரிவித்துள்ளார். 'அப்படி எந்த ஒரு பேச்சும் இதுவரை நாங்கள் பேசவில்லை. விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்து வருகிறார். அவருக்கு இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசை.

படித்து முடித்து வந்த பிறகு ஹீரோவாக ஆவாரா? இயக்குனர் ஆவாரா? என்பது அவருக்கு தான் தெரியும். இதுநாள் வரை நானும் விஜய்யும் கூட இதைப் பற்றி பேசியது இல்லை' என பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஓடிடி-யில் வெளியாக வாய்பில்லை என்றும், எவ்வளவு நாட்கள் ஆனாலும் தியேட்டர் திறந்த பிறகு தான் அந்த படம் ரிலீசாகும்' எனவும் பிரிட்டோ உறுதிபட தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.