பாதியில் நிறுத்தபட்ட "மாஸ்டர்" திரைப்படம் - கொந்தளித்த ரசிகர்கள் - என்ன காரணம்..?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டருக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் ரெய்டு விடுவதுதான் மாஸ்டர் படத்தின் மையக்கரு.
இந்நிலையில், காரைக்காலில் உள்ள 2 தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில் முருகராமு என்ற தியேட்டரில் காலை 6 மணி காட்சிக்கு ரசிகர்கள் திரண்டனர்.
திட்டமிட்டபடி ஆறு மணிக்கு காட்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது. இடைவேளைக்கு பிறகு சிறிது நேரமே படம் ஓடிய நிலையில் திடீரென ஒளிபரப்பில் தடை ஏற்பட்டது.
இதனால், கடுப்பான ரசிகர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் சிறிது நேரத்தில் சரி செய்து விடுவோம் எனவும் யாரும் ரகளையில் ஈடுபட வேண்டாம் என்றும் தியேட்டர் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
இதன் பின்னர் ரசிகர்கள் அமைதியடைந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் படம் திரையிடப்படாததால் ரசிகர்கள் மீண்டும் கொந்தளிக்க தொடங்கினார்கள். அசம்பாவிதம் ஏற்படக் கூடுமென்று அச்சமடைந்த தியேட்டர் நிர்வாகம் ரசிகர்களுக்கு பாதி பணத்தை திரும்ப கொடுத்து அவர்களை வெளியேற்றியது.
இதனால் விஜய் ரசிகர்கள் விரக்தியடைந்தனர். பிளாக்கில் அதிக விலை கொடுத்து வாங்கி படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கும் உரிய பணம் கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டும் எழுந்தது.