ச்ச்சீ.. கருமம்... இதுல பிரியாணி செஞ்சிருக்கீங்க... விளாசிய நெட்டிசன்கள் - கூலாக பதில் கூறிய வனிதா..!

 
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வனிதாவுக்கு, தற்போது பட வாய்ப்பு குவிந்து வருகிறது. 
 
ஏராளமான படங்களில் நடித்து வரும் இவர், தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் தனக்கு விருப்பமான உணவுகளை சமைத்து அசத்துவார். படங்களில் பிசியானதால் கடந்த சில மாதங்களாக யூடியூபில் வீடியோ எதுவும் பதிவிடாமல் இருந்த வனிதா, நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று ஒரு சமையல் வீடியோ ஒன்றை பதிவிட்டார். 
 
அந்த வீடியோ தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த சர்ச்சைக்கு காரணம் அவர் பீப் பிரியாணி செய்தது தான். இந்த வீடியோ நன்றாக இருப்பதாக சிலர் பாராட்டினாலும், பலரோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்தனர். 
 
 
நீங்களெல்லாம் இந்துவா?, கருமம், நீங்க வெளியிட்டதிலேயே இதுதான் மோசமான வீடியோ என்றெல்லாம் கமெண்ட் செய்து வனிதாவை திட்டித் தீர்த்தனர். இந்நிலையில், இந்த சர்ச்சைக்களுக்கு கூலாக பதிலடி கொடுத்துள்ளார் வனிதா. 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “ மக்களே என்ன ஆச்சு உங்களுக்கு. என்னுடைய நட்பு வட்டத்தில் நிறைய மலையாளிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது வெறும் உணவு தான். நான் ஏழு வயதில் இருந்தே அமெரிக்காவில் வளர்ந்தவள். 
 
இதனால் சிறு வயதில் இருந்தே பல நாட்டு உணவு வகைகளை சாப்பிட்டு இருக்கிறேன். நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். அதை பிறர் மீது திணிக்கக் கூடாது. 


 
இது பிடிக்கவில்லை என்றால் வீடியோவில் என் மகள் கூறியது போல், உங்களுக்கு பிடித்த மாமிசத்தையோ, காய்கறியயோ வைத்து இதே பிரியாணியை சமைத்து சந்தோஷமா சாப்பிடுங்க என்று வனிதா அதில் குறிப்பிட்டுள்ளார்.
Blogger இயக்குவது.